சிதம்பரம் சாமியார்பேட்டை கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கிராமத்தை சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் என சிதம்பர சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் சாமியார்பேட்டை கிராமம் உள்ளது. இது கடற்கரை ஒட்டிய கிராமமாகும். இப்பகுதியில் தென்னை மரங்கள் நிறைந்த எழில்மிகுந்த கடற்கரை அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், தினந்தோறும் திரளான பொதுமக்கள் அங்கு சென்று பொழுதை கழிக்கின்றனர். மேலும் அருகே உள்ள கடலூர் பகுதி மக்களும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.
சாமியார்பேட்டைக்கு செல்ல தரமான சாலை வசதியும், போதிய பஸ் வசதியும் உள்ளதால், சுற்றுலா தலமாக்குவதற்கான அனைத்து தகுதிகளையும் இந்த கடற்கரை பெற்றுள்ளது. பயணிகள் தங்கும் வகையில் தங்கும் இடங்கள், குளியல் அறைகள், கழிப்பறைகள், உடைமாற்றுவதற்கான தனி அறைகள், குடிநீர் வசதி, மின் இணைப்பு உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.