திங்கள், 29 நவம்பர், 2010

வடலூர் நகரை அழகுப்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

கடலூர் : 
 
            வடலூர் நகரை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ்  ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

               கடலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் கடலூர்-விருத்தாசலம் சாலையின் இருபுறமும் அகலப்படுத்தவும், மண்சாலை பகுதியில் இருபுறமும் மேம்பாடு செய்யவும், வடலூர் நகரை அழகுபடுத்துவதற்காக சுகாதாரத்துறை அமைச்சரின் துரித முயற்சியில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பரிந்துரையின் படி, தமிழக அரசு சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து போக்குவரத்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு, போக்குவரத்து தங்குதடையின்றி  நடைபெறும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 26 நவம்பர், 2010

சிதம்பரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.
சிதம்பரம்:

                 சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் பிச்சாவரம் வனப்பகுதிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் அதிகரித்துள்ளது.

                கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகளும், ஆயிரக்கணக்கான உள்நாட்டுப் பயணிகளும் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதிக்கு சென்று, அங்கு படகு சவாரி மூலம் மாங்குரோவ் காடுகளை கண்டு ரசிக்கின்றனர். 

               ""கடந்த ஆண்டில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நடராஜர் கோயிலை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். நிகழாண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது'' என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி ஜி.ராமமூர்த்தி தெரிவித்தார்.

            மேலும் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பஸ்களில் செல்ல விரும்புவோரும், ஊட்டி, கொடைக்கானல், முதுமலை, ஏற்காடு, மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களில் தங்கம் விரும்புவோரும் சிதம்பரத்தில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 

       04144 238739

செல்போன்: 

          96594 96446.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வியாழன், 11 நவம்பர், 2010

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம் ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாறுமா?

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை மேற்கூரையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள்.

நெய்வேலி : 

                    ராமலிங்க அடிகள் வாழ்ந்த வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

                   கடலூர் நகரத்திலிருந்து 38 கி.மீ. மேற்கே அமைந்துள்ளது வடலூர். வடலூர் நான்கு முனைசந்திப்பிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம். இங்கு வள்ளலார் ராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட சத்தியஞான சபையும், ஞான சபையை ஒட்டி அணையா அடுப்புடன் கூடிய தருமசாலையும் உள்ளன. இந்த ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று 6 காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. 

                            இதைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வள்ளலார் தெய்வ நிலையத்தில் கூடுவார்கள்.இதோடு மட்டுமில்லாமல் வள்ளலார் கரங்களால் தீ மூட்டப்பட்டு, இன்றுவரை அது அணையாமல் அந்த அடுப்பில் உணவுகள் தயார் செய்யப்படுகிறது. பசி என்று வருவோர் பசியைப் போக்க தருமசாலைக்கு வரும் அன்பர்களுக்கு 3 வேளையும் உணவு பரிமாறப்படுகிறது. இது 105 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது. 

                     இந்த தருமசாலை வள்ளலாரின் அன்பர்கள் தரும் தானியங்கள் மூலமாகவும், நிதியுதவியின் மூலமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இத்தகைய சிறப்பு வாய்ந்த வள்ளலார் தெய்வ நிலையத்தில் தற்போது விரிவுபடுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. தைப்பூசத் தரிசனத்தைக் காணவரும் பொதுமக்கள், சிரமமின்றி ஜோதியைக் காண ஞானசபை முன் பிரமாண்டமான மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் வள்ளலார் தெய்வ நிலைய முகப்பிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

                   மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வள்ளலார் தெய்வ நிலையத்தை அழகுப்படுத்தும் திட்டத்தை உருவாக்கி, சுற்றிலும் பூங்கா அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன் முதற்கட்டமாக தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் நன்கொடை வழங்கியதோடு, என்எல்சி நிறுவனத்தின் உதவியையும் கோரியுள்ளார். இதோடு நில்லாமல் தமிழக சுற்றுலாத் துறையின் மூலம் 68 லட்சம் செலவில் ஞானசபையை சுற்றிலும் சிமென்ட் சாலை, 2 உயர் கோபுர மின்விளக்கு, வடலூர்-விருத்தாசலம் சாலை மார்க்கத்திலிருந்து ஞானசபை வரை தார்சாலை, தருமசாலையை சுற்றிலும் தார்சாலை, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

                  இது தவிர்த்து சுற்றுலா வளர்ச்சித் துறையின் மூலம் 2 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளன. இதன்மூலம் தருமசாலை முன்  1 கோடி செலவில் ஆர்சிசி மண்டபம், தலா 25 லட்சம் செலவில் நூலகம் மற்றும் படிப்பகம், 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், வள்ளலார் வரலாற்று கண்காட்சி அரங்கம், ஞானசபை குளம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளப்படவிருப்பதாக வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி நாகராஜன் தெரிவித்தார்.

                       வள்ளலார் அன்பர்களின் விருப்பங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவரும் அரசு, நூறு ஆண்டுகளை கடந்து இன்றும் சன்மார்க்கத்தை உலகமெலாம் பரப்பிவரும் வள்ளலாரின் கொள்கைகளுக்கு மதிப்பளித்து, வள்ளலார் வாழ்ந்த இடத்தை ஆன்மீக சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்பது சன்மார்க்க அன்பர்களின் கோரிக்கையாகும்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

செவ்வாய், 9 நவம்பர், 2010

கடலூர் சில்வர் பீச்

புகைப்படம் எடுக்கப்பட்ட நாள் 06.11.2010









Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 8 நவம்பர், 2010

பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்

கிள்ளை:

                  பிச்சாவரத்தில் படகு சவாரி மூலம், தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு கூடுதலாக 40 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கிள்ளை அடுத்த பிச்சாவரத்தில் சுற்றுலாத் துறை மூலம் படகு சவாரிக்கு அனுமதிக்கப்பட்டு துடுப்பு படகுகளுடன், மோட்டார் படகுகள் இயக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. 

                          குறிப்பாக கோடை மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. தற்போது தீவாளியை முன்னிட்டு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறையாக இருந்ததால், நேற்று முன்தினம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால், கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் படகு சவாரி மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாயாகும். நேற்று "ஜல்' புயல் காரணமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.

Read more...

செவ்வாய், 2 நவம்பர், 2010

கடலூரில் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்க தமிழக அரசு கவனம் செலுத்துமா?

கடலூர் : 

                    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட கடலூர் துறைமுகம் சரக்கு கப்பல் போக்குவரத்தின்றி முடங்கிப்போய் உள்ளது. கடலூர் துறைமுகம் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வாணிபத்திற்காக இந்தியா வந்தபோது கடலூரை தலை நகரமாகக் கொண்டு வியாபாரம் செய்தனர். 

                     தமிழகத்தில் இயற்கையான துறைமுகமான கடலூரில் சாலை, குடோன் அருகிலேயே ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக இருந்ததால் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, சீனா, வளைகுடா நாடுகளில் இருந்து "புளோர்ஸ்பர்' (சீன களிமண்) செல்ஸ்பர் கற்கள்,  நிலக்கரி, கோதுமை, உரம், தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட் நிறுவனத்திற்குத் தேவையான "புரப்பலின் காஸ்' உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

                     இரும்புத் தாது, வெங்காயம், அரிசி, சர்க்கரை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு மாவு உள்ளிட்ட பொருட்கள் சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1960ம் ஆண்டுகளில் ஒரே நேரத்தில் 16 கப்பல்கள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் சிறப்பாக நடந்தது. இதனால் கடலூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றனர்.

                        நாளடைவில் படிப்படியாக கப்பல் போக்குவரத்து குறைந்து வணிகம் மந்தமடைந்தது. கடந்த 1996ம் ஆண்டில் இருந்து கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் துறைமுகம் முற்றிலும் முடங்கியது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக கப்பல் போக்குவரத்து இல்லாததால் துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடோன்கள், துறைமுக சாலை, முகத்துவாரம் தூர்ந்து நாளடைவில்  பழுதடைந்தது.

                         கடலூர் துறைமுகத்தில் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த 2007-08ம் ஆண்டு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 14 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டது. முகத்துவாரத்தில் இருந்து இரு பக்கமும் மண் சரியாமல் இருக்க 300 மீ., தூரத்திற்கு கருங்கற்கள் கொட்டி அலை தடுப்பு அமைக்கப்பட்டது. 

                      இதனைத் தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு கடலூர் துறைமுகத்தில் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கியது. கடந்த 2008 ஜனவரி மாதம் சீனாவில் இருந்து இரண்டு கப்பல்கள் மூலம் "யூரியா' உரம் இறக்குமதி செய்யப்பட்டது.தொடர்ந்து மார்ச் மாதம் இந்தோனேஷியாவில் இருந்து மூன்றாவது கப்பலில் வந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது.  அத்துடன்  கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக துறைமுகம் பழையபடி வெறிச்சோடியது.

                               இந்நிலையில் கடலூர் துறைமுகத்தை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அருகில் உள்ள காரைக்கால் துறைமுகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் 14 கோடி ரூபாய் செலவு செய்து சீரமைக்கப்பட்ட கடலூர் துறைமுகத்தின் மீது தமிழக அரசும் தனி கவனம் செலுத்தாததால் மிகப்பெரிய துறைமுகம் முற்றிலும் செயலிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

                       நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகத்தின் கீழ் இயங்கி வரும் கடலூர் துறைமுகத்தின் மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்தி மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க நடவடிக்கை மேற்கொண்டால் அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும். பல ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், தொடர்ந்து பல்வேறு புதிய தொழிற்சாலைகளும் அமைய வாய்ப்புள்ளது. 

                        கடலூர் அடுத்த பெரியக்குப்பத்தில் அமைக்கப்பட்டு வரும் நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் நிறுவனம், கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட நிறுவனங்கள் விரைவில் அமைய உள்ள நிலையில் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்கினால் கடலூர் மாவட்ட மக்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP