ஞாயிறு, 15 மே, 2011

கடலூர் மாவட்ட சுற்றுலாத் தளங்கள்


கடலூர்:

           வேளாண் மாவட்டமான கடலூரில், சுற்றுலா வாய்ப்புகள் மிகக்குறைவு. என்.எல்.சி. நிலக்கரிச் சுரங்கங்கள், பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள், பழமை வாய்ந்த கோயில்கள், வடலூர் சத்தியஞானசபை, கடலூர் சில்வர் பீச் ஆகியவை மக்கள் கண்டுகளிக்கும் இடங்களாக உள்ளன. எனினும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளும், சிதம்பரம் நடராஜர் கோயிலும் மட்டுமே சுற்றுலாத் துறையின் பட்டியலில் உள்ளன.
 
           தமிழக மக்களின் சுற்றுலாக்களில் கோயில்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கோயிலுக்குச் செல்லாமல் எந்த சுற்றுலாவும் மனநிறைவைத் தருவதில்லை. பாண்டிய, சோழ மன்னர்கள் மற்றும் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட, உலகப் புகழ் பெற்ற பழமை வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோயில், சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய 5 இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பஞ்ச பூதங்களில் இறைவன், ஆகாய வடிவில் இருக்கிறான் என்பதே சிதம்பர ரகசியம். 160 அடி உயரம் கொண்ட கிழக்கு கோபுரத்தில், பரத நாட்டியத்தின் 108 வகை தோற்றங்களின் சிற்பங்கள் உள்ளன. கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 முதல் பகல் 12 மணி வரை, மாலை 5 முதல் இரவு 10 மணி வரை.
 
           திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், 108 வைணவத் தலங்களில் முக்கியத் தலமாக, நடுநாட்டுத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்றத் தலம். தெற்கு வடக்காக ஓடும் கெடிலம் நதிக்கரையில் கோயில் அமைந்து இருப்பது காசிக்கு இணையான சிறப்பு அம்சம். வடகலை வைணவர்களின் ஆச்சாரியார் எனப்படும் வேதாந்த தேசிகர் இங்கு, 41 ஆண்டுகள் தங்கி தவம் புரிந்திருக்கிறார். தேசிகருக்கு காட்சி கொடுத்த, கல்விக் கடவுளான ஹயகிரீவர் முதலாவது தோன்றிய தலம், திருவந்திபுரம் மலையாகும். தேவநாதசுவாமி கோயில், ஹயகிரீவர் கோயில் ஆகியவற்றுக்கு, ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள்.
 
           தேவநாத சுவாமி கோயில் காலை 6-30 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8-30 மணி வரையிலும், ஹயகிரீவர் கோயில் காலை 8 முதல் 11 மணி வரையும். மாலை 5 முதல் 7 மணி வரையிலும் திறந்து இருக்கும். கடலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்து இருக்கும் தொன்மை வாய்ந்த பாடலீஸ்வரர் கோயில், பராந்தகச் சோழனால் கட்டப்பட்டு, பின்னர் பல மன்னர்களால் விரிவுபடுத்தப் பட்டது. ஆண்டுக்கு 1 லட்சத்துக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அப்பர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றத் தலம். கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 மணி முதல் 11-30 மணி வரை, மாலை 4 முதல் இரவு 9-15 மணி வரை.
 
           ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் வைணவ அவதர ஸ்தலங்களில் 3-வதாகக் கருதப்படுகிறது. பூமியை மீட்டுக் கொடுத்த அவதாரம் என்பதால் நிலம், ரியல் எஸ்டேட் சம்மந்தமான பிரச்னைகள் தீர, பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள். கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 முதல் பகல் 12 மணி வரை. மாலை 4-30 முதல் இரவு 9 மணி வரை.
 
           பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில். 7-ம் நூற்றாண்டுக்கு முந்தையது. சிவபெருமானின் 8 வீரச் செயல்களில் ஒன்றான, 3 அசுரர்களை அழித்த தலம். அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடல் பெற்றது. அப்பருக்கு வந்த சூலை நோயை நீக்கிய தலமாவதால், வயிற்றுவலி சம்பந்தப்பட்ட நோய்கள் தீர, பக்தர்கள் பலரும் இங்கு வருகிறார்கள். கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 முதல் பகல் 12 மணி வரை. மாலை 4-30 முதல் இரவு 9 மணி வரை. 
 
             குடியானவர்களின் கடவுளாக விளங்கும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில், இறைவன் உருவமற்றவனாகக் காட்சி கொடுக்கிறார். எனவே இங்கே விக்ரகங்கள் இல்லை. மூலஸ்தானத்தில் பாறை மீது கிரீடம் மட்டும் வைக்கப்பட்டு இருக்கிறது. பிரார்த்தனை கோயிலாக விளங்கும் இங்கு ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களுக்காக வருகிறார்கள். பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை, சீட்டில் எழுதிப் போட்டுச் செல்வார்கள். கோரிக்கைகள் 30 நாள்களில் நிறைவேறும். நிறைவேறாவிட்டால் மீண்டும் கோரிக்கையை புதிப்பித்துக் கொண்டால், 90 நாள்களில் நிறைவேறும் என்பதும் ஐதீகம். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோயிலுக்கு வந்த, சம்பந்தர், விருத்த கிரீஸ்வரரைப் பாடாமல் சென்றதாகவும், அதுகுறித்து சிவபெருமானே கொளஞ்சியப்பரிடம் புகார் கொடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து சம்பந்தர் விருத்தகிரீஸ்வரரைப் பாடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.
 
             பழமை வாய்ந்த விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற தலம். 5 பிரகாரங்கள், 5 கொடி மரங்கள், 5 நந்திகள், 5 தீர்த்தங்கள், 5 கோபுரங்கள், 5 தேர்களைக் கொண்டது. கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 முதல் 12 மணி வரை. மாலை 4 முதல் 8 மணி வரை.
 
            கடல் காற்றின் சுகத்தை அனுபவிக்க ரம்யமான இடமாகத் திகழ்வது கடலூர் சில்வர் பீச். பராமரிப்பின்மையால், படகு குழாம், குழந்தைகள் பூங்கா போன்றவை சிதைந்து கிடக்கின்றன. வசதிகளை எதிர்பாராமல், கடற்கரையில் அமர்ந்து அழகை ரசித்துச் செல்லலாம்.


Read more...

புதன், 11 மே, 2011

கோடை விடுமுறை: பிச்சாவரத்துக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு


சிதம்பரம்:
 
     சுரபுன்னை காடுகள் அடங்கிய சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பகுதியில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியை காண சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. 
 
                கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதிக்கு நாளுக்கு, நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.  வெளிநாட்டினரும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். கடலோரப் பகுதியில் உப்பனாற்றில் சுரபுன்னை (மாங்குரோவ்) செடிகள் அடங்கிய காடுகளை படகில் சென்று சுற்றிப்பார்த்து ரசிக்கின்றனர். படகு சவாரி செய்யும் பயணிகளுக்கு சுற்றுலாத் துறையினரால் சேப்டி ஜாக்கெட் வழங்கப்படுகின்றது.  
 
                பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.  படகு குழாமில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு ரூ.40 வீதம், துடுப்பு படகில் 5 பேர் பயணம் செய்ய ரூ.200 கட்டண மும், மோட்டார் படகில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு ரூ.100 வீதம் 8 பேர் பயணம் செய்ய ரூ.800 வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைதான் படகுச் சவாரிக்கு அனுமதியளிக்கப்படுகிறது.  
தங்கும் விடுதி, உணவகம்: 
 
             பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தங்கும் விடுதி, உணவகம் நடத்த பிரபல நிறுவனமான ஹோட்டல் சாரதாராம் நிறுவனத்திடம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை குத்தகைக்கு ஒப்படைத்துள்ளது. தற்போது அந்நிறுவனம் உணவகத்தை நடத்தி வருகிறது. விரைவில் அந்நிறுவனம் அங்கு பாருடன் கூடிய தங்கும் விடுதியை திறக்கவுள்ளது.  மேலும் விழாக்கள், கருத்தரங்கம், பயிலரங்கு நடத்தும் வகையில் கூட்ட அறை ஒன்றும் அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. விடுதி வளாகத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு, பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.  இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிச்சாவரத்திலேயே தங்கியும் சுற்றி பார்க்கலாம் என அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.சுவேதகுமார் தெரிவித்தார்.
 
பிச்சாவரம் சுற்றுலா மைய ஹோட்டல் சாரதாராம் தொலைபேசி எண்: 04144 249399, 249400.

Read more...

வியாழன், 5 மே, 2011

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு





சிதம்பரம்:

                சிதம்பரம் பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில், கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சீசன் "களை' கட்டத் துவங்கியுள்ளது.

               உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோவிலுக்கு அடுத்து பிச்சாவரம் வன சுற்றுலா மையம், கடலூர் மாவட்டத்திற்கு ஒரு வரப்பிரசாதம். 5,000 ஏக்கர் பரப்பளவில், சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த இச்சுற்றுலா மையத்தில், இயற்கைச் சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை எனும் "மாங்குரோவ்ஸ்' தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலக அளவிலான சுற்றுலா மையம் எனும் சிறப்பை பெற்றுள்ளது. 18 வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உள் நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை காலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.க டலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது பிச்சாவரம் சுற்றுலா மையம். 4,444 கால்வாய்கள் ஒரே மாதிரியாக இருப்பது வியப்பு. "அறிஞர் அண்ணா சுற்றுலா மையம்' என, இந்த சுற்றுலா மையத்திற்கு பெயர்.
 

              கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுலா மையத்தில் படகுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், முற்றிலும் சேதமடைந்தன. மீண்டும் சுற்றுலாத் துறை சார்பில் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. படகு சவாரி செய்யும் இடத்தில் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க ஷெட், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இருந்தபடியே, மாங்குரோவ்ஸ் காடுகள் மற்றும் அழகிய கடற்கரை பகுதிகளை ரசிக்கவும், அங்கிருந்தபடியே சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை கண்டு ரசிக்கும் வகையில், 6 லட்சம் ரூபாய் செலவில் உயர் கோபுரம் (வாட்சிங் டவர்), சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. புதிய படகுகள் வாங்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் வசதிக்காக தனியாரிடம் உணவு விடுதி, தங்கும் அறைகள் ஆகியன ஏற்படுத்தப்பட்டன.
 
               தற்போது, ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய்க்கு குறையாமல், வருமானம் வருகிறது. கடந்த ஒரே மாதத்தில் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளது.பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை சமாளிக்க சுற்றுலா மையம் தயாராகி விட்டது. அதிக திறன் கொண்ட இன்ஜின்கள் பொருத்தப்பட்ட படகுகள் வாங்கப்பட்டுள்ளன. இதனால், பிச்சாவரம் களை கட்டியுள்ளது.
 
காலை 6 மணிக்கே படகு சவாரி:

             இங்கு, காலை 6 மணிக்கே படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது. துடுப்பு படகில் சவாரி செய்ய, நபர் ஒன்றுக்கு 40 ரூபாயும், இன்ஜின் படகு 40 நிமிடத்திற்கு, நபர் ஒன்றுக்கு, 100 ரூபாயும் (8 பேர் பயணம் செய்யலாம்) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அமைதியான சூழல்...:

            பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில், படகு சவாரி செய்வது மன அழுத்தத்தை குறைத்து அமைதியை தரும் ரம்யமான சூழல் உள்ளது. இங்குள்ள மூலிகைத் தாவரங்களில் உள்ள காற்று மருத்துவ குணம் கொண்டது. இங்குள்ள சுரபுன்னை எனும் "மாங்குரோவ்ஸ்' தாவரங்கள் உலக அளவில் சுமித்ரா, ஜாவா, இந்தோனேஷியா, இலங்கை உட்பட சில நாடுகளிலும், இந்தியாவில் தமிழகம், ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் காணப்படுகிறது. 5,000 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகளில், இயற்கை சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் நிறைந்திருப்பதால், சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

Read more...

திங்கள், 2 மே, 2011

கடலூர் வெள்ளி கடற்கரையில் (சில்வர் பீச்) கோடை விழா நடத்தப்படுமா?


சில்வர் பீச் உப்பங்கழிப் பகுதியில், சேதமடைந்து காணாமல் போன சுற்றுலாப் படகுத்துறை இருந்த இடம் இதுதான் என அடையாளம் காண்பிக்கும் பனைமரத் தூண்கள்.
கடலூர்:
 
           டலூர் சில்வர் பீச்சில் இந்த ஆண்டாவது கோடைவிழா நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

              சென்னை மெரீனா கடற்கரைக்கு அடுத்தபடியாக அழகான, நீளமான கடற்கரை என்று வர்ணிக்கப்படுவது சில்வர் பீச். தமிழ்நாடு சுற்றுலாத் துறையின், சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் இடம்பெறவில்லை. இருப்பினும், கடலூர் மாவட்ட நிர்வாகம் சில்வர் பீச்சை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது.  

               அலைகள் தாலாட்டும் நீலநிற வங்கக் கடல், அதன் கரையில் ஆங்காங்கே அமைந்துள்ள மணல் திட்டுகள் மேல் இயற்கையாக வளர்ந்து உள்ள கொடிகளில் கண் சிமிட்டும் ஊதா நிறப் பூக்கள், படகுச் சவாரிக்கு ஏற்ற உப்பங்கழிப் பகுதி, அதன் அருகே சவுக்குத் தோப்புகள், வனத்துறையால் நடப்பட்டு, பராமரிப்பு இன்மையால் சிதைந்து கொண்டு இருக்கும் மாங்ரோவ் காடுகள், இதையடுத்து சிதைந்து கிடக்கும் புனித டேவிட் கோட்டை உள்ளிட்ட ஆங்கிலேயர் காலத்து கட்டடங்கள்.

                இவைகள் தான் வண்ண ஓவியமாய் காட்சி அளிக்கும் சில்வர் பீச்.  சுற்றுலா படகுத் துறை, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, கலையரங்கம், காட்சிக் கோபுரம், அலங்கார செயற்கை நீரூற்று, ஹைமாஸ் விளக்குகள், குடிநீர் வசதி எனப் பல்வேறு பணிகளுக்காக, 2008-ம் ஆண்டு வரை சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் இங்கு செலவிடப் பட்டது.  2004-ம் ஆண்டு சுனாமியின்போது கடற்கரையியில்  இருந்த காட்சிக் கோபுரம் மண்ணில் புதையுண்டது. 2005-ம் ஆண்டு அது புதுப்பிக்கப்பட்டது. எனினும் தற்போது சிதைந்து பயனற்றுக் கிடக்கிறது. குழந்தைகள் விளையாட்டு பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன.

               கடற்கரையில் காற்று வாங்க அமர்வதற்கு வசதியாக போடப்பட்ட இருக்கைகள் சேதம் அடைந்து விட்டன.  ரூ. 10 லட்சத்தில் சுற்றுலா படகுத்துறையில் மரத்தால் அமைக்கப்பட்டு இருந்த இறங்கு தளங்கள் முற்றிலும் சிதைந்து, அதற்காக நடப்பட்ட பனை மரங்கள் மட்டும் வரலாற்றுச் சின்னங்கள் போல் காட்சி அளிக்கின்றன. ÷சுற்றுலாப் படகுகள் அனைத்தும் உப்பங்கழி அருகே கவிழ்த்துப் போடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் என்.எல்.சி. நிர்வாகம் அமைத்துக் கொடுத்த மின் விளக்கு கோபுரங்கள் பராமரிப்பு இன்மையால், வெளிச்சத்துக்குப் பதில் இருளை அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கின்றன. 

            2001-ம் ஆண்டு ரூ.5 லட்சத்தில் என்.எல்.சி. நிர்வாகம் அமைத்துக் கொடுத்த பூங்கா இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று.  சுனாமியில் சிதைந்து போன சில்வர் பீச் புறக்காவல் நிலையத்துக்குப் பதில், அழகான புறக்காவல் நிலையம், மாடியில் சிற்றுண்டிச் சாலை, அதற்கு மேல் கடலின் அழகை ரசிக்க, காட்சிக் கோபுரம் என ராஜஸ்தான் அரசு கட்டிக் கொடுத்து இருந்தது. தற்போது இக் கட்டடத்தை காவல் துறை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு, போலீஸ் அதிகாரிகளின் ஓய்வறையாக மாற்றி இருப்பதன் மூலம் சில்வர் பீச் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. 

               ஆண்டுதோறும் 5 நாள் வரை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்த சில்வர் பீச் சுற்றுலா கோடை விழாவும், 2008-ம் ஆண்டுடன் நின்று போயிற்று. இந்த ஆண்டாவது கோடை விழா நடைபெறுமா என்று அரசு அதிகாரிகளைக் கேட்டதற்கு, தேர்தல் பணியில் இருந்து விட்டால் போதும் என்ற நிலையில் இருக்கிறோம். அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்கவில்லை. நிலைமை இப்படியிருக்க, கோடை விழா பற்றி சிந்திக்க எங்கே நேரம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை. புதிய அரசு அமையட்டும் அதன்பிறகு பார்க்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்.  இந்நிலையில் சில்வர் பீச்சுக்கு வரும் பொதுமக்களிடம், வாகனக் கட்டணம் வசூல் மட்டும் எவ்விதத் தடையும் இன்றி நடந்து கொண்டிருக்கிறது. 

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP