சனி, 10 டிசம்பர், 2011

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த 25 சிவனடியார்கள் தீப தரிசனம்

கடலூர் : 

          மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த 25 சிவனடியார்கள் கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று தீப தரிசனம் செய்தனர்.

           மொரீஷியஸ் நாட்டில் வாழும் தமிழ் வாழ் சிவனடியார்கள் 25 பேர் கடந்த வாரம் முதல் வரும் ஜனவரி 8ம் தேதி வரை 40 நாட்கள் தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களில் தீப தரிசனம் செய்ய பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று முன் தினம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப தரிசனம் செய்த அவர்கள், திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில், திருஆமத்தூர் அபிராமேஸ்வரர், திருவெண்ணைநல்லூர், திருவதிகை சிவன் கோவில்களில் தரிசனம் செய்த அவர்கள் நேற்று கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தீப தரிசனம் செய்தனர்.தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்றனர். ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் உள்ள சிவன் கோவில்களில் தரிசனம் செய்கின்றனர்.

Read more...

செவ்வாய், 22 நவம்பர், 2011

சிதம்பரம் சாமியார்பேட்டை கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை

சிதம்பரம்:

         சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கிராமத்தை சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் என சிதம்பர சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதம்:  

            சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் சாமியார்பேட்டை கிராமம் உள்ளது. இது கடற்கரை ஒட்டிய கிராமமாகும். இப்பகுதியில் தென்னை மரங்கள் நிறைந்த எழில்மிகுந்த கடற்கரை அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், தினந்தோறும் திரளான பொதுமக்கள் அங்கு சென்று பொழுதை கழிக்கின்றனர்.  மேலும் அருகே உள்ள கடலூர் பகுதி மக்களும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.

            சாமியார்பேட்டைக்கு செல்ல தரமான சாலை வசதியும், போதிய பஸ்  வசதியும் உள்ளதால், சுற்றுலா தலமாக்குவதற்கான அனைத்து தகுதிகளையும் இந்த கடற்கரை பெற்றுள்ளது. பயணிகள் தங்கும் வகையில் தங்கும் இடங்கள், குளியல் அறைகள், கழிப்பறைகள், உடைமாற்றுவதற்கான தனி அறைகள், குடிநீர் வசதி, மின் இணைப்பு உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Read more...

சனி, 29 அக்டோபர், 2011

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு

சிதம்பரம்:
 
             சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். 

              அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெள்ளிக்கிழமை நடராஜர் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் கோயில் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை மீது முதலாம் பராந்தக சோழனால் வேயப்பட்ட பொற்கூரை, ஆயிரங்கால் மண்டபம் ஆகியவற்றின் கலைநயத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் கோயிலின் வரலாற்றை வழிகாட்டிகள் மூலம் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். 

              அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டிலிருந்து வரும் பெண்கள் பெரும்பானோர் தமிழக கலாசாரப்படி புடவை கட்டிக்கொண்டு கோயிலுக்கு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற தரிசன திருவிழாவில் பெரும்பாலான வெளிநாட்டுப் பெண்கள் புடவை கட்டிக்கொண்டு வலம் வந்தது அனைவரையும் வியக்க வைத்தது.


Read more...

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

கடலூர் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையை ஊக்குவிக்க புதிய திட்டம்


கடலூர்:

                 சுற்றுலாப் பயணிகள் வருகையை ஊக்குவிக்கும் வகையில், தனியார் வீடுகளில் சுற்றுலாப் பயணிகளைத் தங்க வைக்கவும், அவர்களுக்கு நமது கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில் உணவு வகைகளை அளிக்கவும் வகை செய்யும் திட்டம், கடலூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி அறிவித்து உள்ளார். 

இது குறித்து ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               தமிழக முதல்வரின் அறிவுரைப்படி சுற்றுலாத் துறையினரால், தமிழகத்தில் தனியார் பங்களிப்புடன், உணவுடன் கூடிய உறைவிடத் திட்டத்தை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதல் இடத்திலும், உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையில், மூன்றாம் இடத்திலும் உள்ளது. பொழுதுபோக்கு, மருத்துவம், கல்வி போன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் வந்து தங்கும், வெளிமாநிலப் பயணிகள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்து உள்ளது. 

             நடுத்தர சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் தற்போது போதுமானதாக இல்லை. எனவே கடலூர் மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, உணவுடன் கூடிய உறைவிடம் அளிக்கும் திட்டம், சுற்றுலாத் துறை மூலம் விரிவு படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் தனியார் தங்கள் வீடுகளில் உள்ள அறைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு அளிக்கலாம். அவ்வாறு தங்கள் வீடுகளில் சுற்றுலாப் பயணிகளை, உணவுடன் தங்க வைக்க விரும்புவோர் தங்கள் பெயர்களை, சுற்றுலாத் துறையில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். உணவுடன் கூடிய உறைவிடத் திட்டம் பற்றிய கையேடுகளில், விவரங்கள் அளிக்கப்படும். 

இத்திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை தங்கள் வீடுகளில் தங்க வைக்க விருப்பம் உள்ளவர்கள், 

சுற்றுலா அலுவலர், 
ரயில்வே ஃபீடர் சாலை, 
சிதம்பரம் (தொலைபேசி எண் 04144- 238739, செல்ஃபோன் 9789055400 ) 

என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.




Read more...

புதன், 27 ஜூலை, 2011

பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா ஆய்வு

சிதம்பரம்:

           சிதம்பரம் அருகே சுரபுண்ணைக் காடுகள் அடங்கிய பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்தை மேம்படுத்துவது குறித்து தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

              பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஹோட்டல் சாராதாராம் நிறுவனத்தாரின் ஹோட்டல் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் விடுதி, கூட்ட அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்காக தொலைநோக்கு கருவி மூலம் பிச்சாவரத்தின் சுரபுண்ணைக் காடுகளைப் பார்த்து மகிழ அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர பார்வையாளர் அரங்கை பார்வையிட்டு அங்கு சுற்றுலாப் பகுதிகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வரைபடம் ஆகியவற்றை வைக்க வேண்டும் என சுற்றுலாத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

            ÷பின்னர் படகுக் குழாமில் பயணிகள் அமரும் இடத்தை பார்வையிட்டு அங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக சுத்தமான குடிநீர் வைக்க சுற்றுலாத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  அப்போது படகு இயக்குபவர்கள் 40 பேர், சக்திவேல் தலைமையில் அமைச்சருக்கு சால்வை அணிவித்து கோரிக்கை மனு அளித்தனர். கமிஷன் அடிப்படையில் பணியாற்றும் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும்.மழைக்காலங்களில் வருமானம் இல்லாததால் மழைகால நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக படகு இயக்குபவர்களிடம் அமைச்சர் உறுதியளித்தார். 

பின்னர் அமைச்சர் கோகுலஇந்திரா பேசுகையில் 

            "பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்தித் தருமாறு சமூகநலத் துறை அமைச்சர் செல்விராமஜெயம் கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் இன்றைய தினம் பிச்சாவரம் சுற்றுலா மையம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னையிலிருந்து பிச்சாவரத்துக்கு வாரம் ஒருமுறை சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்தார்.

                  அமைச்சருடன் சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறை செயலர் வி.ஜெயக்கொடி, சுற்றுலா வளர்ச்சித் துறை ஆணையர் ஏ.சி.மோகன்தாஸ், கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி, ஹோட்டல் சாரதாராம் நிர்வாக இயக்குநர் அரிமா ஆர்.எம்.சுவேதகுமார்,  மக்கள் - தொடர்பு அலுவர் போ.முத்தையா, சுற்றுலாத் துறை அலுவலர் ராமமூர்த்தி, மேலாளர் ஹரிஹரன், அதிமுக மாவட்ட துணைச் செயலர் தேன்மொழி காத்தவராயசாமி, மாவட்ட மாணவரணி இணைச் செயலர் எஸ்.முத்தையன், ஒன்றிய மாணவரணிச் செயலர் வி.சண்முகசுந்தரம், காத்தவராயசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Read more...

திங்கள், 6 ஜூன், 2011

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா

 
கடலூர்:

      கடலூர் திருப்பாபுலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். 
 
          
                அதுபோல் இந்த ஆண்டு வைகாசி திருவிழா திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 9 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. இரவு 8 மணிக்கு இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் மற்றும் சேக்கிழார் வீதி உலா நடைபெறுகிறது.

              தொடர்ந்து 13-ந் தேதி வரை காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும், மண்டகப்படியும் நடக்கிறது.   விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது.  தேர் திருவிழாவில் கடலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெகநாதன், செயல் அலுவலர் மேனகா ஆகியோர் செய்து வருகிறார்கள்.
 
 

Read more...

ஞாயிறு, 15 மே, 2011

கடலூர் மாவட்ட சுற்றுலாத் தளங்கள்


கடலூர்:

           வேளாண் மாவட்டமான கடலூரில், சுற்றுலா வாய்ப்புகள் மிகக்குறைவு. என்.எல்.சி. நிலக்கரிச் சுரங்கங்கள், பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள், பழமை வாய்ந்த கோயில்கள், வடலூர் சத்தியஞானசபை, கடலூர் சில்வர் பீச் ஆகியவை மக்கள் கண்டுகளிக்கும் இடங்களாக உள்ளன. எனினும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளும், சிதம்பரம் நடராஜர் கோயிலும் மட்டுமே சுற்றுலாத் துறையின் பட்டியலில் உள்ளன.
 
           தமிழக மக்களின் சுற்றுலாக்களில் கோயில்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கோயிலுக்குச் செல்லாமல் எந்த சுற்றுலாவும் மனநிறைவைத் தருவதில்லை. பாண்டிய, சோழ மன்னர்கள் மற்றும் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட, உலகப் புகழ் பெற்ற பழமை வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோயில், சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய 5 இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பஞ்ச பூதங்களில் இறைவன், ஆகாய வடிவில் இருக்கிறான் என்பதே சிதம்பர ரகசியம். 160 அடி உயரம் கொண்ட கிழக்கு கோபுரத்தில், பரத நாட்டியத்தின் 108 வகை தோற்றங்களின் சிற்பங்கள் உள்ளன. கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 முதல் பகல் 12 மணி வரை, மாலை 5 முதல் இரவு 10 மணி வரை.
 
           திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், 108 வைணவத் தலங்களில் முக்கியத் தலமாக, நடுநாட்டுத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்றத் தலம். தெற்கு வடக்காக ஓடும் கெடிலம் நதிக்கரையில் கோயில் அமைந்து இருப்பது காசிக்கு இணையான சிறப்பு அம்சம். வடகலை வைணவர்களின் ஆச்சாரியார் எனப்படும் வேதாந்த தேசிகர் இங்கு, 41 ஆண்டுகள் தங்கி தவம் புரிந்திருக்கிறார். தேசிகருக்கு காட்சி கொடுத்த, கல்விக் கடவுளான ஹயகிரீவர் முதலாவது தோன்றிய தலம், திருவந்திபுரம் மலையாகும். தேவநாதசுவாமி கோயில், ஹயகிரீவர் கோயில் ஆகியவற்றுக்கு, ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள்.
 
           தேவநாத சுவாமி கோயில் காலை 6-30 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8-30 மணி வரையிலும், ஹயகிரீவர் கோயில் காலை 8 முதல் 11 மணி வரையும். மாலை 5 முதல் 7 மணி வரையிலும் திறந்து இருக்கும். கடலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்து இருக்கும் தொன்மை வாய்ந்த பாடலீஸ்வரர் கோயில், பராந்தகச் சோழனால் கட்டப்பட்டு, பின்னர் பல மன்னர்களால் விரிவுபடுத்தப் பட்டது. ஆண்டுக்கு 1 லட்சத்துக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அப்பர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றத் தலம். கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 மணி முதல் 11-30 மணி வரை, மாலை 4 முதல் இரவு 9-15 மணி வரை.
 
           ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் வைணவ அவதர ஸ்தலங்களில் 3-வதாகக் கருதப்படுகிறது. பூமியை மீட்டுக் கொடுத்த அவதாரம் என்பதால் நிலம், ரியல் எஸ்டேட் சம்மந்தமான பிரச்னைகள் தீர, பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள். கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 முதல் பகல் 12 மணி வரை. மாலை 4-30 முதல் இரவு 9 மணி வரை.
 
           பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில். 7-ம் நூற்றாண்டுக்கு முந்தையது. சிவபெருமானின் 8 வீரச் செயல்களில் ஒன்றான, 3 அசுரர்களை அழித்த தலம். அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடல் பெற்றது. அப்பருக்கு வந்த சூலை நோயை நீக்கிய தலமாவதால், வயிற்றுவலி சம்பந்தப்பட்ட நோய்கள் தீர, பக்தர்கள் பலரும் இங்கு வருகிறார்கள். கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 முதல் பகல் 12 மணி வரை. மாலை 4-30 முதல் இரவு 9 மணி வரை. 
 
             குடியானவர்களின் கடவுளாக விளங்கும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில், இறைவன் உருவமற்றவனாகக் காட்சி கொடுக்கிறார். எனவே இங்கே விக்ரகங்கள் இல்லை. மூலஸ்தானத்தில் பாறை மீது கிரீடம் மட்டும் வைக்கப்பட்டு இருக்கிறது. பிரார்த்தனை கோயிலாக விளங்கும் இங்கு ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களுக்காக வருகிறார்கள். பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை, சீட்டில் எழுதிப் போட்டுச் செல்வார்கள். கோரிக்கைகள் 30 நாள்களில் நிறைவேறும். நிறைவேறாவிட்டால் மீண்டும் கோரிக்கையை புதிப்பித்துக் கொண்டால், 90 நாள்களில் நிறைவேறும் என்பதும் ஐதீகம். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோயிலுக்கு வந்த, சம்பந்தர், விருத்த கிரீஸ்வரரைப் பாடாமல் சென்றதாகவும், அதுகுறித்து சிவபெருமானே கொளஞ்சியப்பரிடம் புகார் கொடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து சம்பந்தர் விருத்தகிரீஸ்வரரைப் பாடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.
 
             பழமை வாய்ந்த விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற தலம். 5 பிரகாரங்கள், 5 கொடி மரங்கள், 5 நந்திகள், 5 தீர்த்தங்கள், 5 கோபுரங்கள், 5 தேர்களைக் கொண்டது. கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 முதல் 12 மணி வரை. மாலை 4 முதல் 8 மணி வரை.
 
            கடல் காற்றின் சுகத்தை அனுபவிக்க ரம்யமான இடமாகத் திகழ்வது கடலூர் சில்வர் பீச். பராமரிப்பின்மையால், படகு குழாம், குழந்தைகள் பூங்கா போன்றவை சிதைந்து கிடக்கின்றன. வசதிகளை எதிர்பாராமல், கடற்கரையில் அமர்ந்து அழகை ரசித்துச் செல்லலாம்.


Read more...

புதன், 11 மே, 2011

கோடை விடுமுறை: பிச்சாவரத்துக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு


சிதம்பரம்:
 
     சுரபுன்னை காடுகள் அடங்கிய சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பகுதியில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியை காண சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. 
 
                கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதிக்கு நாளுக்கு, நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.  வெளிநாட்டினரும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். கடலோரப் பகுதியில் உப்பனாற்றில் சுரபுன்னை (மாங்குரோவ்) செடிகள் அடங்கிய காடுகளை படகில் சென்று சுற்றிப்பார்த்து ரசிக்கின்றனர். படகு சவாரி செய்யும் பயணிகளுக்கு சுற்றுலாத் துறையினரால் சேப்டி ஜாக்கெட் வழங்கப்படுகின்றது.  
 
                பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.  படகு குழாமில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு ரூ.40 வீதம், துடுப்பு படகில் 5 பேர் பயணம் செய்ய ரூ.200 கட்டண மும், மோட்டார் படகில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு ரூ.100 வீதம் 8 பேர் பயணம் செய்ய ரூ.800 வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைதான் படகுச் சவாரிக்கு அனுமதியளிக்கப்படுகிறது.  
தங்கும் விடுதி, உணவகம்: 
 
             பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தங்கும் விடுதி, உணவகம் நடத்த பிரபல நிறுவனமான ஹோட்டல் சாரதாராம் நிறுவனத்திடம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை குத்தகைக்கு ஒப்படைத்துள்ளது. தற்போது அந்நிறுவனம் உணவகத்தை நடத்தி வருகிறது. விரைவில் அந்நிறுவனம் அங்கு பாருடன் கூடிய தங்கும் விடுதியை திறக்கவுள்ளது.  மேலும் விழாக்கள், கருத்தரங்கம், பயிலரங்கு நடத்தும் வகையில் கூட்ட அறை ஒன்றும் அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. விடுதி வளாகத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு, பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.  இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிச்சாவரத்திலேயே தங்கியும் சுற்றி பார்க்கலாம் என அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.சுவேதகுமார் தெரிவித்தார்.
 
பிச்சாவரம் சுற்றுலா மைய ஹோட்டல் சாரதாராம் தொலைபேசி எண்: 04144 249399, 249400.

Read more...

வியாழன், 5 மே, 2011

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு





சிதம்பரம்:

                சிதம்பரம் பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில், கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சீசன் "களை' கட்டத் துவங்கியுள்ளது.

               உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோவிலுக்கு அடுத்து பிச்சாவரம் வன சுற்றுலா மையம், கடலூர் மாவட்டத்திற்கு ஒரு வரப்பிரசாதம். 5,000 ஏக்கர் பரப்பளவில், சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த இச்சுற்றுலா மையத்தில், இயற்கைச் சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை எனும் "மாங்குரோவ்ஸ்' தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலக அளவிலான சுற்றுலா மையம் எனும் சிறப்பை பெற்றுள்ளது. 18 வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உள் நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை காலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.க டலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது பிச்சாவரம் சுற்றுலா மையம். 4,444 கால்வாய்கள் ஒரே மாதிரியாக இருப்பது வியப்பு. "அறிஞர் அண்ணா சுற்றுலா மையம்' என, இந்த சுற்றுலா மையத்திற்கு பெயர்.
 

              கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுலா மையத்தில் படகுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், முற்றிலும் சேதமடைந்தன. மீண்டும் சுற்றுலாத் துறை சார்பில் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. படகு சவாரி செய்யும் இடத்தில் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க ஷெட், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இருந்தபடியே, மாங்குரோவ்ஸ் காடுகள் மற்றும் அழகிய கடற்கரை பகுதிகளை ரசிக்கவும், அங்கிருந்தபடியே சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை கண்டு ரசிக்கும் வகையில், 6 லட்சம் ரூபாய் செலவில் உயர் கோபுரம் (வாட்சிங் டவர்), சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. புதிய படகுகள் வாங்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் வசதிக்காக தனியாரிடம் உணவு விடுதி, தங்கும் அறைகள் ஆகியன ஏற்படுத்தப்பட்டன.
 
               தற்போது, ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய்க்கு குறையாமல், வருமானம் வருகிறது. கடந்த ஒரே மாதத்தில் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளது.பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை சமாளிக்க சுற்றுலா மையம் தயாராகி விட்டது. அதிக திறன் கொண்ட இன்ஜின்கள் பொருத்தப்பட்ட படகுகள் வாங்கப்பட்டுள்ளன. இதனால், பிச்சாவரம் களை கட்டியுள்ளது.
 
காலை 6 மணிக்கே படகு சவாரி:

             இங்கு, காலை 6 மணிக்கே படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது. துடுப்பு படகில் சவாரி செய்ய, நபர் ஒன்றுக்கு 40 ரூபாயும், இன்ஜின் படகு 40 நிமிடத்திற்கு, நபர் ஒன்றுக்கு, 100 ரூபாயும் (8 பேர் பயணம் செய்யலாம்) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அமைதியான சூழல்...:

            பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில், படகு சவாரி செய்வது மன அழுத்தத்தை குறைத்து அமைதியை தரும் ரம்யமான சூழல் உள்ளது. இங்குள்ள மூலிகைத் தாவரங்களில் உள்ள காற்று மருத்துவ குணம் கொண்டது. இங்குள்ள சுரபுன்னை எனும் "மாங்குரோவ்ஸ்' தாவரங்கள் உலக அளவில் சுமித்ரா, ஜாவா, இந்தோனேஷியா, இலங்கை உட்பட சில நாடுகளிலும், இந்தியாவில் தமிழகம், ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் காணப்படுகிறது. 5,000 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகளில், இயற்கை சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் நிறைந்திருப்பதால், சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

Read more...

திங்கள், 2 மே, 2011

கடலூர் வெள்ளி கடற்கரையில் (சில்வர் பீச்) கோடை விழா நடத்தப்படுமா?


சில்வர் பீச் உப்பங்கழிப் பகுதியில், சேதமடைந்து காணாமல் போன சுற்றுலாப் படகுத்துறை இருந்த இடம் இதுதான் என அடையாளம் காண்பிக்கும் பனைமரத் தூண்கள்.
கடலூர்:
 
           டலூர் சில்வர் பீச்சில் இந்த ஆண்டாவது கோடைவிழா நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

              சென்னை மெரீனா கடற்கரைக்கு அடுத்தபடியாக அழகான, நீளமான கடற்கரை என்று வர்ணிக்கப்படுவது சில்வர் பீச். தமிழ்நாடு சுற்றுலாத் துறையின், சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் இடம்பெறவில்லை. இருப்பினும், கடலூர் மாவட்ட நிர்வாகம் சில்வர் பீச்சை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது.  

               அலைகள் தாலாட்டும் நீலநிற வங்கக் கடல், அதன் கரையில் ஆங்காங்கே அமைந்துள்ள மணல் திட்டுகள் மேல் இயற்கையாக வளர்ந்து உள்ள கொடிகளில் கண் சிமிட்டும் ஊதா நிறப் பூக்கள், படகுச் சவாரிக்கு ஏற்ற உப்பங்கழிப் பகுதி, அதன் அருகே சவுக்குத் தோப்புகள், வனத்துறையால் நடப்பட்டு, பராமரிப்பு இன்மையால் சிதைந்து கொண்டு இருக்கும் மாங்ரோவ் காடுகள், இதையடுத்து சிதைந்து கிடக்கும் புனித டேவிட் கோட்டை உள்ளிட்ட ஆங்கிலேயர் காலத்து கட்டடங்கள்.

                இவைகள் தான் வண்ண ஓவியமாய் காட்சி அளிக்கும் சில்வர் பீச்.  சுற்றுலா படகுத் துறை, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, கலையரங்கம், காட்சிக் கோபுரம், அலங்கார செயற்கை நீரூற்று, ஹைமாஸ் விளக்குகள், குடிநீர் வசதி எனப் பல்வேறு பணிகளுக்காக, 2008-ம் ஆண்டு வரை சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் இங்கு செலவிடப் பட்டது.  2004-ம் ஆண்டு சுனாமியின்போது கடற்கரையியில்  இருந்த காட்சிக் கோபுரம் மண்ணில் புதையுண்டது. 2005-ம் ஆண்டு அது புதுப்பிக்கப்பட்டது. எனினும் தற்போது சிதைந்து பயனற்றுக் கிடக்கிறது. குழந்தைகள் விளையாட்டு பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன.

               கடற்கரையில் காற்று வாங்க அமர்வதற்கு வசதியாக போடப்பட்ட இருக்கைகள் சேதம் அடைந்து விட்டன.  ரூ. 10 லட்சத்தில் சுற்றுலா படகுத்துறையில் மரத்தால் அமைக்கப்பட்டு இருந்த இறங்கு தளங்கள் முற்றிலும் சிதைந்து, அதற்காக நடப்பட்ட பனை மரங்கள் மட்டும் வரலாற்றுச் சின்னங்கள் போல் காட்சி அளிக்கின்றன. ÷சுற்றுலாப் படகுகள் அனைத்தும் உப்பங்கழி அருகே கவிழ்த்துப் போடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் என்.எல்.சி. நிர்வாகம் அமைத்துக் கொடுத்த மின் விளக்கு கோபுரங்கள் பராமரிப்பு இன்மையால், வெளிச்சத்துக்குப் பதில் இருளை அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கின்றன. 

            2001-ம் ஆண்டு ரூ.5 லட்சத்தில் என்.எல்.சி. நிர்வாகம் அமைத்துக் கொடுத்த பூங்கா இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று.  சுனாமியில் சிதைந்து போன சில்வர் பீச் புறக்காவல் நிலையத்துக்குப் பதில், அழகான புறக்காவல் நிலையம், மாடியில் சிற்றுண்டிச் சாலை, அதற்கு மேல் கடலின் அழகை ரசிக்க, காட்சிக் கோபுரம் என ராஜஸ்தான் அரசு கட்டிக் கொடுத்து இருந்தது. தற்போது இக் கட்டடத்தை காவல் துறை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு, போலீஸ் அதிகாரிகளின் ஓய்வறையாக மாற்றி இருப்பதன் மூலம் சில்வர் பீச் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. 

               ஆண்டுதோறும் 5 நாள் வரை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்த சில்வர் பீச் சுற்றுலா கோடை விழாவும், 2008-ம் ஆண்டுடன் நின்று போயிற்று. இந்த ஆண்டாவது கோடை விழா நடைபெறுமா என்று அரசு அதிகாரிகளைக் கேட்டதற்கு, தேர்தல் பணியில் இருந்து விட்டால் போதும் என்ற நிலையில் இருக்கிறோம். அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்கவில்லை. நிலைமை இப்படியிருக்க, கோடை விழா பற்றி சிந்திக்க எங்கே நேரம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை. புதிய அரசு அமையட்டும் அதன்பிறகு பார்க்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்.  இந்நிலையில் சில்வர் பீச்சுக்கு வரும் பொதுமக்களிடம், வாகனக் கட்டணம் வசூல் மட்டும் எவ்விதத் தடையும் இன்றி நடந்து கொண்டிருக்கிறது. 

Read more...

திங்கள், 18 ஏப்ரல், 2011

கோடை சுற்றுலாவுக்கு எழில்மிகு பிச்சாவரம்!


சுரபுன்னை (மாங்குரோவ்) காடுகளின் ஒரு பகுதி.
சிதம்பரம்:

             மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டது. இந்த விடுமுறையை பயனுள்ளதாக்க கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடலோரத்தில் பிச்சாவரம் சுற்றுலா வனப் பகுதியில் உள்ள எழில்மிகு மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகளை படகில் சுற்றிப் பார்த்து மகிழலாம். சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. 

               சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுன்னை காடுகளும் எல்லைகளாக உள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் செடிகளும் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் சுமார் 4,400 கால்வாய்கள் உள்ளன. 

               இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.இந்த மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகள், கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்க்கலாம். ஆண்டுதோறும் இப்பகுதியில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும். மேலும் கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்தனர்.2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலையின்போது மேற்கண்ட தீவுகளில் உள்ள மீனவர்கள் பலர் இறந்ததால் தற்போது அங்கு மீனவர்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

            எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்றதால் அங்குள்ள தீவுக்கு எம்.ஜி.ஆர். திட்டு என பெயர் சூட்டப்பட்டது.இங்குள்ள சுரபுன்னை செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், புற்றுநோய் மற்றும் கொடிய நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மைய சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்களை புற்றுநோய் தாக்குவதில்லை என அந் நிறுவனத்தினர் தெரிவித்தனர். பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. 

           சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: 

பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாக மேலாளர் 
தொலைபேசி எண்: 04144-24923 

சிதம்பரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக தொலைபேசி எண்: 04144-238739 

கிள்ளை பேரூராட்சி தொலைபேசி எண்: 04144-24227. 

வெப்சைட் முகவரி: www.killai.com.

Read more...

புதன், 16 மார்ச், 2011

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கேடயம்

கிள்ளை : 

               சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையம் படகு சவாரி மூலம் கூடுதல் வருவாய் ஈட்டி மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றதை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

             தமிழக அரசு சுற்றுலாத் துறை மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் பெற்று தரும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் படகு குழுமத்தை பாராட்டி ஆண்டு தோறும் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்து வருகிறது. பிச்சாவரம் சுற்றுலா மையம் படகு சவாரி மூலம் 2008 - 2009ம் ஆண்டு 40 லட்சம் ரூபாயும், 2009 -10ம் ஆண்டில் 65 லட்சம் ரூபாயும், வருவாய் ஈட்டி மாநில அளவில் சிறப்பு பரிசு பெற்றது. தற்போது 2010 -11ம் ஆண்டில் 80 லட்சம் ரூபாய் வசூலித்து மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது.

              தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பரிசு பெற்று வரும் பிச்சாவரம் படகு குழாமிற்கு சிறப்பு கேடயத்தை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ் முன்னிலையில், சுற்றுலாத்துறை செயலர் ஜவகர், பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

Read more...

புதன், 26 ஜனவரி, 2011

கடலூர் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது


கடலூர்:

         கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில் 274 சிவதலங்களுள் ஒன்றாகும். 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி 1 1/2 கோடி ரூபாய் செலவில் கோவில் திருப்பணிகள் நடை பெற்றன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 19-ந் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

                 இதைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. மகா கும்பாபிஷேகம் இன்று (26-ந்தேதி) நடை பெற்றது. காலை 5 மணி முதல் 7 மணிவரை யாகபூஜையும், 7.30 மணி முதல் 8 மணிவரை மஹா பூர்ணாஹ¨தி, தீபாராதனை யாத்ரா தானம் ஆகிய பூஜைகளும் நடைபெற்றன. இது முடிந்த பின்னர் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு ராஜகோபுரம் மற்றும் சகல விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பாடலீஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பாலமணி, மகாதேவன், நாகராஜன் ஆகியோர் தலைமையில் 108 சிவாச் சாரியார்கள் கும்பாபிஷேக பூஜைகளை செய்தனர்.

                 விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி மாலா, அய்யப்பன் எம்.எல்.ஏ., நீதிபதி ராமபத்ரன் ஆகியோர் பங்கேற்றனர். அங்காளபரமேஸ்வரி ஆலய தக்கார் அரிமா ஆர்.வி. நாகராஜன், சுபஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் வி.பி.எஸ். கணேசன், ஆனந்தபவன் உரிமையாளர் நாராயணன், புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து, நியூ அழகப்பா ஜுவல்லரி உரிமையாளர்கள் அழகப்பா ராஜகோபால், ரமேஷ்குமார், தமிழ்நாடு வெஜிடேரியன் ரெஸ்டாரண்டு உரிமையாளர் ராஜமாணிக்கம், அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சேவல்குமார், தொகுதி இணை செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மாதவன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி கல்யாண சுந்தரம், பி.கே. ரியல் எஸ்டேட் உரிமையாளர் வெங்கட்ராமன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமணன், சூர்யா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் நாராயணன், முத்து கலர் லேப் உரிமையாளர் முத்து உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

                     கும்பாபிஷேகத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாண்டியன், குப்புசாமி, பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் சுந்தரவடி வேலு, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு உள்பட 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  200 தன்னார்வ தொண்டர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். 5 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். கும்பாபிஷேகத்தை யொட்டி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. பொது அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றம் குடிநீர் வழங்கப்பட்டது.  கடலூர் நகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது. மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. தீயணைப்பு வண்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. ஈஷா யோகா மையம் மற்றும் வெளிநாட்டினர் சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

                கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், உதவி ஆணையர் ஜெகநாதன், கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், ஆய்வாளர் வெங்கடேசன், வழிபடுவோர் சங்க தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Read more...

Cuddalore Padaleeswarar Temple Mahakumbabhishekam held


People witnessing Mahakumbabhishekam at Padaleeswarar temple in Thirupadiripuliyur on Wednesday

CUDDALORE: 

          A large number of devotees drawn from various places descended on Cuddalore to witness the Mahakumbabhishekam performed at renowned Sri Padaleeswarar Temple at Thirupadiripuliyur here on Wednesday.

         The rituals that started at 5 a.m. by savants led by T.K. Balamani Sivachariar of Thirukannangudi culminated in Mahakumbabhishekam at about 9.30 a.m. A music band from Isha Yoga Centre gave an enthralling performance just before the main event that whipped up spiritual fervour among the devotees.The accompanying commentaryover the public address system also riveted the attention of the gathering. A helicopter, hired by a private company, hovered over the temple and showered flower petals on the gopurams to the delight of the gathering.

        As the turnout was so huge, the organisers had requisitioned the services of the fire service personnel to spray the holy water on them through the multi-chute fire tenders at low speed. Many philanthropists and service organizations had put up make-shift stalls to dispense water and buttermilk to the visitors. The entire Cuddalore town wore a festive look on account of the Mahakumbabhishekam and the Republic Day celebrations. The Padaleeswarar Temple Worshippers' Association had also incorporated a new chute to drain the milk poured over the Nandi during Pradhosham time. The Association had also put up many brass stands for placing the lighted earthen lamps so as to prevent any oil spill or stains on the temple walls.

         The Mahakumbabhishekam was performed after a gap of about 14 years at a cost of Rs 1.25 crore and a lion's share of it had come from the members of the Association. The Hindu Religious and Charitable Endowment Department had spent less than Rs 9 lakh on the renovation of the Raja gopuram. In the evening Thiru Kalyanam was performed and the deities were taken in a procession on silver Rishaba vahanam. The temple is categorised as first grade one with an annual collection from the hundis amounting to Rs 40 lakh, according to HR & CE Department sources.

Read more...

திங்கள், 24 ஜனவரி, 2011

Ancient Padaleeswarar temple all set for Maha Kumbabhishekam


Padaleeswarar temple getting ready for Kumbabhishekam on Wednesday


CUDDALORE: 

           The ancient Padaleeswarar temple, situated in the heart of the Cuddalore town, is all set for Maha Kumbabhishekam on January 26. It is one among the renowned 274 Siva temples whose history reportedly dates back to 2,000 years.

          The entire premises of the temple has been given a facelift at an estimated cost of Rs 1.25 crore, of which the share of the Hindu Religious and Charitable Endowment Department, that is running the affairs of the temple, is hardly Rs 10 lakh. The HR & CE Department has undertaken to renovate and repaint only the Raja gopuram while the Sri Padaleeswarar Temple Worshippers' Association has taken care of all other works through donors.

        Association secretary V.Balu who has been closely supervising the works, told The Hindu that the kumbabhishekam was last performed nearly 14 years ago on March 26, 1997 It is being done under the guidance of Kannangudi Balamani Sivachariar, an authority on Agama Sastras. Mr Balu could not say whether any other worshippers' association had undertaken works of such magnitude elsewhere. The Association came into being with Dr K.Krishnamurthy as president, Mr Balu as Secretary and K.Karthikeyan as treasurer with the specific purpose of preparing a temple car as the original one was gutted in a fire accident over a century ago.

          The Association mobilized an amount of Rs 50 lakh out of which it carved out a new temple car by spending Rs 32 lakh. The remaining Rs 18 lakh had been set aside as a corpus to meet the expenditure of conducting the annual car festival that might run into Rs 1 lakh to Rs 1.5 lakh. Mr Balu said that emboldened by the temple car experiment, the Association had embarked upon the relatively un-charted territory of renovating the temple and organizing the kumbabhishekam and the works were going on smoothly.

          The 29 vimanams (top portions of the gopurams) in the temple were renovated and the 24-pillar mandapam had been beautified. The flooring of Sri Periyanayagi Amman temple and that of the Singapore mandapam (so named because it was built from the funds contributed by Singapore citizens) were elevated with granite slabs. All the sculptures and pillars were given a chemical wash to remove the oil smudges and metallic barricades had been put up in front of the sanctum sanctorum. The flag posts had been given a copper coating.

       Scores of compact fluorescent lamps (CFLs) in glass domes light up the inside of the temple, perfectly matching the traditional lamps. While 40 of the existing Vahanams (mounts) were repaired and repainted, two new ones—Anna Vahanam and Rishaba vahanam—were made anew, thus taking the total number to 42. A separate ‘go shala' had been built in which at least a dozen cows were being fed. The compound wall of the temple pond ‘Siva kara theertham' had also been raised to protect its sanctity. The Maha Kumbabhishekam would be performed between 9 a.m. and 10 a.m. on January 26.

Read more...

புதன், 19 ஜனவரி, 2011

பிச்சாவரத்தில் பொங்கல் படகு சவாரி : ரூ. 3.16 லட்சம் வருவாய்

கிள்ளை : 

              சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.26 லட்சம் ரூபாய் படகு சவாரியில் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. 

             கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையம் 3,000 ஏக்கர் பரப்பளவில் கடலுக்கும் ஆற்றுக்கும் இடையில் சதுப்பு நிலத்தாவரங்களால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள வனங்களைப் பாதுகாக்க தமிழக அரசு சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மூலிகைத் தாவரங்கள் நிறைந்த பிச்சாவரம் வனப் பகுதியில் படகில் சென்று வருவதால் மனதுக்கும் உடலுக்கும் இதமான புத்துணர்ச்சி கிடைக்கிறது. 

            இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு பிச்சாவரம் படகு சவாரிக்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை,கோவை, சென்னை உட்பட பெருநகரங்களில் இருந்தும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தனர். காலை 7 மணி முதல் படகு சவாரிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 

              அதிகளவில் பயணிகள் குவிந்ததால் முன்பதிவு செய்து மூன்று மணி நேரம் வரை காத்திருந்து படகு சவாரி செய்தனர். மாலை 6 மணி வரை படகு சவாரிக்கு அனுமதி என்பதால் பகல் 3 மணிக்கு புக்கிங் முடிந்தது. மாலையில் வந்த பல சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கிள்ளையில் இருந்து குறுக்கு வழியாக நாகை மாவட்டம் கொடியம்பாளையம் கடற்கரைக்குச் சென்றனர். 

                பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரியில் மட்டும் 14ம் தேதி 35 ஆயிரம் ரூபாயும், 15ம் தேதி 60 ஆயிரம் ரூபாயும், 16ம் தேதி 91 ஆயிரம் ரூபாயும், நேற்று மதியம் 3 மணிவரை 1.30 லட்சம் ரூபாய் என பொங்கலை முன்னிட்டு 3.16 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாயாகும்.

Read more...

திங்கள், 3 ஜனவரி, 2011

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் புத்தாண்டு வருவாய் ரூ.1.26 லட்சம்

கிள்ளை : 

          சிதம்பரம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் புத்தாண்டை முன்னிட்டு, சனி மற்றும் ஞாயிறு இரு நாட்களில் படகு சவாரியின் மூலம், ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 

          கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள சதுப்பு நிலக் காட்டில், பல அரிய வகை தாவரங்கள் உள்ளன. இதனால் வெளிநாடு, பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் பிச்சாவரத்திற்கு வந்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது 18 வகைக்கும் மேற்பட்ட மூலிகைகள் மற்றும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற 55 வகையான தாவரங்களை வனத்துறையினர் மற்றும் பசுமை நெறியியல் அமைப்பு சார்பில் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர். 

              ஆண்டுதோறும் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பரில் பெய்த கனமழையால் சுற்றுலா மையம் வெறிச்சோடியது. தற்போது புத்தாண்டை முன்னிட்டு சனி,ஞாயிறு இருதினங்களில் படகு சவாரி மூலம், ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்தாண்டை விட 30 ஆயிரம் ரூபாய் கூடுதலாகும்.

Read more...

About This Blog

Blog Archive

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP