ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

பிச்சாவரத்தில் சுற்றுலாத்துறை மூலம் "விடியல் விழா"

கடலூர் :

       பிச்சாவரத்தில் சுற்றுலாத்துறை மூலம் "விடியல் விழா' நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் பிச்சாவரம் சுற்றுலா அலுவலகத்தில் நடந்தது.
 
கூட்டத்தில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசியது:
 

     சிதம்பரம் அருகே அமைந்துள்ள பிச்சாவரம் உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். மாங்குரோவ் காடுகள் உள்ள இப்பகுதிக்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் சிதம்பரம் சுற்றுப்பகுதியில்தான் உலகிலேயே முதலில் யோகா முறை பின்பற்றப்பட்டது. 18 சித்தர்களும், பதஞ்சலி முனிவர்களும் இங்கு யோகா கலையை வளர்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த இப்பகுதியை உலகச் சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்ய தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் பிச்சாவரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் விடியல் விழா நடத்தப்படவுள்ளது.

         சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்,யோகா வகுப்புகள் நடத்தப்படும். மேலும் அதிகாலை சூரியோதய நிகழ்ச்சியை எம்.ஜி.ஆர்., திட்டு தீவிலிருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் அமைச்சர் சிறப்பிக்கவுள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் எக்கோ சுற்றுலா இங்கு மேம்படுத்தவும், வருங்காலங்களில் ஆண்டின் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை தர கலெக்டர், தனியார் சுற்றுலா அமைப்பாளர்கள், 5 நட்சத்திர விடுதி நடத்துனர்கள் மற்றும் யோகா கலை மைய அமைப்பாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.சிதம்பரம் கூடுதல் எஸ்.பி., துரை, ஆர்.டி.ஓ., இந்துமதி, பி.ஆர்.ஓ., தமிழ்செல்வராஜன் பங்கேற்றனர்.


0 கருத்துகள்:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP