வியாழன், 5 மே, 2011

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு





சிதம்பரம்:

                சிதம்பரம் பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில், கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சீசன் "களை' கட்டத் துவங்கியுள்ளது.

               உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோவிலுக்கு அடுத்து பிச்சாவரம் வன சுற்றுலா மையம், கடலூர் மாவட்டத்திற்கு ஒரு வரப்பிரசாதம். 5,000 ஏக்கர் பரப்பளவில், சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த இச்சுற்றுலா மையத்தில், இயற்கைச் சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை எனும் "மாங்குரோவ்ஸ்' தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலக அளவிலான சுற்றுலா மையம் எனும் சிறப்பை பெற்றுள்ளது. 18 வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உள் நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை காலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.க டலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது பிச்சாவரம் சுற்றுலா மையம். 4,444 கால்வாய்கள் ஒரே மாதிரியாக இருப்பது வியப்பு. "அறிஞர் அண்ணா சுற்றுலா மையம்' என, இந்த சுற்றுலா மையத்திற்கு பெயர்.
 

              கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுலா மையத்தில் படகுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், முற்றிலும் சேதமடைந்தன. மீண்டும் சுற்றுலாத் துறை சார்பில் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. படகு சவாரி செய்யும் இடத்தில் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க ஷெட், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இருந்தபடியே, மாங்குரோவ்ஸ் காடுகள் மற்றும் அழகிய கடற்கரை பகுதிகளை ரசிக்கவும், அங்கிருந்தபடியே சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை கண்டு ரசிக்கும் வகையில், 6 லட்சம் ரூபாய் செலவில் உயர் கோபுரம் (வாட்சிங் டவர்), சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. புதிய படகுகள் வாங்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் வசதிக்காக தனியாரிடம் உணவு விடுதி, தங்கும் அறைகள் ஆகியன ஏற்படுத்தப்பட்டன.
 
               தற்போது, ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய்க்கு குறையாமல், வருமானம் வருகிறது. கடந்த ஒரே மாதத்தில் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளது.பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை சமாளிக்க சுற்றுலா மையம் தயாராகி விட்டது. அதிக திறன் கொண்ட இன்ஜின்கள் பொருத்தப்பட்ட படகுகள் வாங்கப்பட்டுள்ளன. இதனால், பிச்சாவரம் களை கட்டியுள்ளது.
 
காலை 6 மணிக்கே படகு சவாரி:

             இங்கு, காலை 6 மணிக்கே படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது. துடுப்பு படகில் சவாரி செய்ய, நபர் ஒன்றுக்கு 40 ரூபாயும், இன்ஜின் படகு 40 நிமிடத்திற்கு, நபர் ஒன்றுக்கு, 100 ரூபாயும் (8 பேர் பயணம் செய்யலாம்) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அமைதியான சூழல்...:

            பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில், படகு சவாரி செய்வது மன அழுத்தத்தை குறைத்து அமைதியை தரும் ரம்யமான சூழல் உள்ளது. இங்குள்ள மூலிகைத் தாவரங்களில் உள்ள காற்று மருத்துவ குணம் கொண்டது. இங்குள்ள சுரபுன்னை எனும் "மாங்குரோவ்ஸ்' தாவரங்கள் உலக அளவில் சுமித்ரா, ஜாவா, இந்தோனேஷியா, இலங்கை உட்பட சில நாடுகளிலும், இந்தியாவில் தமிழகம், ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் காணப்படுகிறது. 5,000 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகளில், இயற்கை சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் நிறைந்திருப்பதால், சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

0 கருத்துகள்:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP