திங்கள், 2 மே, 2011

கடலூர் வெள்ளி கடற்கரையில் (சில்வர் பீச்) கோடை விழா நடத்தப்படுமா?


சில்வர் பீச் உப்பங்கழிப் பகுதியில், சேதமடைந்து காணாமல் போன சுற்றுலாப் படகுத்துறை இருந்த இடம் இதுதான் என அடையாளம் காண்பிக்கும் பனைமரத் தூண்கள்.
கடலூர்:
 
           டலூர் சில்வர் பீச்சில் இந்த ஆண்டாவது கோடைவிழா நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

              சென்னை மெரீனா கடற்கரைக்கு அடுத்தபடியாக அழகான, நீளமான கடற்கரை என்று வர்ணிக்கப்படுவது சில்வர் பீச். தமிழ்நாடு சுற்றுலாத் துறையின், சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் இடம்பெறவில்லை. இருப்பினும், கடலூர் மாவட்ட நிர்வாகம் சில்வர் பீச்சை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது.  

               அலைகள் தாலாட்டும் நீலநிற வங்கக் கடல், அதன் கரையில் ஆங்காங்கே அமைந்துள்ள மணல் திட்டுகள் மேல் இயற்கையாக வளர்ந்து உள்ள கொடிகளில் கண் சிமிட்டும் ஊதா நிறப் பூக்கள், படகுச் சவாரிக்கு ஏற்ற உப்பங்கழிப் பகுதி, அதன் அருகே சவுக்குத் தோப்புகள், வனத்துறையால் நடப்பட்டு, பராமரிப்பு இன்மையால் சிதைந்து கொண்டு இருக்கும் மாங்ரோவ் காடுகள், இதையடுத்து சிதைந்து கிடக்கும் புனித டேவிட் கோட்டை உள்ளிட்ட ஆங்கிலேயர் காலத்து கட்டடங்கள்.

                இவைகள் தான் வண்ண ஓவியமாய் காட்சி அளிக்கும் சில்வர் பீச்.  சுற்றுலா படகுத் துறை, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, கலையரங்கம், காட்சிக் கோபுரம், அலங்கார செயற்கை நீரூற்று, ஹைமாஸ் விளக்குகள், குடிநீர் வசதி எனப் பல்வேறு பணிகளுக்காக, 2008-ம் ஆண்டு வரை சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் இங்கு செலவிடப் பட்டது.  2004-ம் ஆண்டு சுனாமியின்போது கடற்கரையியில்  இருந்த காட்சிக் கோபுரம் மண்ணில் புதையுண்டது. 2005-ம் ஆண்டு அது புதுப்பிக்கப்பட்டது. எனினும் தற்போது சிதைந்து பயனற்றுக் கிடக்கிறது. குழந்தைகள் விளையாட்டு பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன.

               கடற்கரையில் காற்று வாங்க அமர்வதற்கு வசதியாக போடப்பட்ட இருக்கைகள் சேதம் அடைந்து விட்டன.  ரூ. 10 லட்சத்தில் சுற்றுலா படகுத்துறையில் மரத்தால் அமைக்கப்பட்டு இருந்த இறங்கு தளங்கள் முற்றிலும் சிதைந்து, அதற்காக நடப்பட்ட பனை மரங்கள் மட்டும் வரலாற்றுச் சின்னங்கள் போல் காட்சி அளிக்கின்றன. ÷சுற்றுலாப் படகுகள் அனைத்தும் உப்பங்கழி அருகே கவிழ்த்துப் போடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் என்.எல்.சி. நிர்வாகம் அமைத்துக் கொடுத்த மின் விளக்கு கோபுரங்கள் பராமரிப்பு இன்மையால், வெளிச்சத்துக்குப் பதில் இருளை அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கின்றன. 

            2001-ம் ஆண்டு ரூ.5 லட்சத்தில் என்.எல்.சி. நிர்வாகம் அமைத்துக் கொடுத்த பூங்கா இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று.  சுனாமியில் சிதைந்து போன சில்வர் பீச் புறக்காவல் நிலையத்துக்குப் பதில், அழகான புறக்காவல் நிலையம், மாடியில் சிற்றுண்டிச் சாலை, அதற்கு மேல் கடலின் அழகை ரசிக்க, காட்சிக் கோபுரம் என ராஜஸ்தான் அரசு கட்டிக் கொடுத்து இருந்தது. தற்போது இக் கட்டடத்தை காவல் துறை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு, போலீஸ் அதிகாரிகளின் ஓய்வறையாக மாற்றி இருப்பதன் மூலம் சில்வர் பீச் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. 

               ஆண்டுதோறும் 5 நாள் வரை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்த சில்வர் பீச் சுற்றுலா கோடை விழாவும், 2008-ம் ஆண்டுடன் நின்று போயிற்று. இந்த ஆண்டாவது கோடை விழா நடைபெறுமா என்று அரசு அதிகாரிகளைக் கேட்டதற்கு, தேர்தல் பணியில் இருந்து விட்டால் போதும் என்ற நிலையில் இருக்கிறோம். அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்கவில்லை. நிலைமை இப்படியிருக்க, கோடை விழா பற்றி சிந்திக்க எங்கே நேரம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை. புதிய அரசு அமையட்டும் அதன்பிறகு பார்க்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்.  இந்நிலையில் சில்வர் பீச்சுக்கு வரும் பொதுமக்களிடம், வாகனக் கட்டணம் வசூல் மட்டும் எவ்விதத் தடையும் இன்றி நடந்து கொண்டிருக்கிறது. 

0 கருத்துகள்:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP