புதன், 11 மே, 2011

கோடை விடுமுறை: பிச்சாவரத்துக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு


சிதம்பரம்:
 
     சுரபுன்னை காடுகள் அடங்கிய சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பகுதியில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியை காண சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. 
 
                கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதிக்கு நாளுக்கு, நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.  வெளிநாட்டினரும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். கடலோரப் பகுதியில் உப்பனாற்றில் சுரபுன்னை (மாங்குரோவ்) செடிகள் அடங்கிய காடுகளை படகில் சென்று சுற்றிப்பார்த்து ரசிக்கின்றனர். படகு சவாரி செய்யும் பயணிகளுக்கு சுற்றுலாத் துறையினரால் சேப்டி ஜாக்கெட் வழங்கப்படுகின்றது.  
 
                பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.  படகு குழாமில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு ரூ.40 வீதம், துடுப்பு படகில் 5 பேர் பயணம் செய்ய ரூ.200 கட்டண மும், மோட்டார் படகில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு ரூ.100 வீதம் 8 பேர் பயணம் செய்ய ரூ.800 வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைதான் படகுச் சவாரிக்கு அனுமதியளிக்கப்படுகிறது.  
தங்கும் விடுதி, உணவகம்: 
 
             பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தங்கும் விடுதி, உணவகம் நடத்த பிரபல நிறுவனமான ஹோட்டல் சாரதாராம் நிறுவனத்திடம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை குத்தகைக்கு ஒப்படைத்துள்ளது. தற்போது அந்நிறுவனம் உணவகத்தை நடத்தி வருகிறது. விரைவில் அந்நிறுவனம் அங்கு பாருடன் கூடிய தங்கும் விடுதியை திறக்கவுள்ளது.  மேலும் விழாக்கள், கருத்தரங்கம், பயிலரங்கு நடத்தும் வகையில் கூட்ட அறை ஒன்றும் அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. விடுதி வளாகத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு, பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.  இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிச்சாவரத்திலேயே தங்கியும் சுற்றி பார்க்கலாம் என அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.சுவேதகுமார் தெரிவித்தார்.
 
பிச்சாவரம் சுற்றுலா மைய ஹோட்டல் சாரதாராம் தொலைபேசி எண்: 04144 249399, 249400.

0 கருத்துகள்:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP